தமிழ்நாடு

ஒரு புறம் சுத்தம்.. மறுபுறமோ புதர்கள்.. தேசிய நெடுஞ்சாலையின் அவலம்

ஒரு புறம் சுத்தம்.. மறுபுறமோ புதர்கள்.. தேசிய நெடுஞ்சாலையின் அவலம்

Rasus

குமுளி மலைப்பாதையின் தேசிய நெடுஞ்சாலையில் ஒருபுறம் தூய்மையாகவும், மறுபுறமும் புதர் மண்டியும் காணப்படுகிறது.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய பகுதியாக குமுளி மலைப்பாதை உள்ளது. தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இந்த குமுளி மலைப்பாதை வழியாகத்தான் கேரளாவிற்குள் செல்கிறது. இரு மாநில இணைப்புச்சாலை என்பதால், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கேரளாவின் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் வாகனங்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் என எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகளவில் சென்று வருவது வழக்கமானதாக இருக்கிறது.

இந்த சாலையின் இருபுறமும் இருவேறு வனத்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குமுளியில் இருந்து மலைப்பாதையில் இறங்கும்போது வலப்புறம், தேனி மாவட்டம் மேகமலை வன உயிரியல் காப்பகத்திற்கும், இடதுபுறம் தேனி வனக்கோட்டம் கூடலுர் சரகத்திற்கும் உட்பட்டதாக உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதியில் இருந்து களைகள், கொடிகள் வளர்ந்து சாலையே தெரியாத அளவிற்கு புதர் மண்டி கிடப்பது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் கொள்வதும், முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தெரியாமல் வாகன விபத்து ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது.

இது குறித்து புதிய தலைமுறையில் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பானது. இதையடுத்து மேகமலை வன உயிரிகள் காப்பகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலையின், அவர்களுக்கு உட்பட்ட சாலையோர புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். கடந்த ஒரு வாரமாக நடந்த பணியில், குமுளி மலைப்பாதையின் ஒருபுறம் சுத்தமாகியுள்ளது. அதேநேரம், அதே சாலையின் நேரெதிர் புறமான மறுபுறம், புதர்மண்டி கிடக்கிறது. போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கு தெரியாதவாறு செடி, கொடிகளால் மூடிக்கிடக்கின்றன. எனவே, பொதுமக்கள், பயணிகள் அதிகம் பயன்படுத்தும் குமுளி மலைப்பாதை வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் மறுபுறமும் உள்ள புதர், செடி கொடிகளை அகற்றி, சீரான ஆபத்தில்லாத போக்குவரத்திற்கு தேனி மாவட்டம் கூடலூர் சரக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.