தமிழ்நாடு

‘நிலத்தில் கெணத்த காணோம்; கட்டியதாக பணம் மட்டும் எடுத்தாச்சு’- திண்டுக்கல்லில் ஒரு சம்பவம்

‘நிலத்தில் கெணத்த காணோம்; கட்டியதாக பணம் மட்டும் எடுத்தாச்சு’- திண்டுக்கல்லில் ஒரு சம்பவம்

webteam

நத்தம் பேரூராட்சியில் ரூ.4 இலட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்காமல் கடந்த அதிமுக ஆட்சியில் பணம் எடுக்கப்பட்டதாக ஆடிட்டிங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு நத்தம் பேருராட்சி சார்பில் மெய்யம்பட்டி, நத்தம், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் 2014 -2015ம் ஆண்டு நத்தம் பேருராட்சிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டது. அவற்றை அரசு ஒப்பந்தகாரர் சக்தி முருகன் என்பவர் டெண்டர் எடுத்துள்ளார். அப்போது நத்தம் பேருராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் தலைவராக இருந்துள்ளார். மேலும் நத்தம் பேருராட்சி செயல் அலுவலராக வெங்கட்ரமணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நத்தம் பேருராட்சி பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கு 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்கு டெண்டர் விடப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்காமல் பணம் எடுத்தது ஆடிட்டிங் ஆய்வின் போது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது சாலை அமைப்பது, குடிநீர் குழாய் அமைப்பது, தெருவிளக்கு அமைப்பது உள்ளிடட பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் திரைப்படங்களில் வரும் வடிவேல் காமெடி மாதிரி கிணற்றை காணோம் எனக் கூறுவது போல் நத்தம் பேருராட்சி பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்காமல் பணம் எடுத்த சம்பவம் நத்தம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.