தமிழ்நாடு

தனித்துவம் மிக்க நாங்குநேரி தொகுதியின் சிறப்புகள் என்ன? 

தனித்துவம் மிக்க நாங்குநேரி தொகுதியின் சிறப்புகள் என்ன? 

webteam

தாமிரபணி பாயும் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோமா?

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினரானதாலும், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததாலும், இவ்விரு தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுதி 1952-ஆம் ஆண்டிலேயே உருவாகப்பட்டது . நாங்குநேரி, களக்காடு ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள்,  முலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு உள்ளிட்ட 5 பேரூராட்சிகள் இந்த தொகுதிக்குள் வருகின்றன. நாங்குநேரி தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். வடக்கு பச்சையாறு அணை, கொடுமுடியாறு அணை நீர், தொகுதியை வளப்படுத்துகின்றன. 

இத்தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் விளைவிக்கப்படும் வாழைகள், தமிழகத்தையும் தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தின் 2-வது பெரிய காப்பகம் ஆகும். அடர்ந்த காடுகள் கொண்ட களக்காடு காப்பகத்தில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனஉயிரினங்கள் வசிக்கின்றன‌.

பறவைகள் ச‌ர‌‌ணாலயம் அமைந்துள்ள கூந்தங்குள‌ம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மகேந்திரகிரியும் இந்தத் தொகுதியில் வரு‌கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனின் பெய‌ரில் இந்தியக் கப்‌பல் படை அமைத்திருக்கும் ஐஎ‌ன்எஸ் கட்டபொம்மன் தளம் நாங்குநேரியின் பெருமைமிகு அடையாளங்கள்.

பெருமைகள் பல கொண்ட நாங்குநேரி தொகுதியில், 2016 சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ ஆக வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வசந்தகுமார், எம்பி ஆனதைத் தொடர்ந்து, இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நாங்குநேரி தொகுதியில், ஆண்கள் 1,27,025 பேர், பெண்கள் 1,29,385 பேர், மூன்றாம் பாலினத்தவர் நால்வர் என மொத்தம் 2,56,414 வாக்காளர்கள்‌ உள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 6 முறையும், அதிமுக 5 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1996 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவருகிறது திமுக. தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலிலும் தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கே தொகுதியை அளித்திருக்கிறது.

இந்தக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் அதிமுகவின் ரெட்டியார்பட்டி நாராயணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணனும் தேர்தல் களத்தில் உள்ளனர்.