பாஜகவுக்கு எதிரான, எதிர்க்கட்சிகளின் பொய்ப்பரப்புரையால் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கடும் பின்னடைவு என்று நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர ஆதரவும், அங்கீகாரத்தையும் 22 தொகுதி இடைத்தேர்தல் மூலம் மக்கள் வழங்கியிருப்பதாக, அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், மனசாட்சி துளியும் அற்ற அவதூறுகள், கோடான கோடி பணத்தை வாரி இறைத்த திமுக, ஊடகங்கள் சிலவற்றின் உண்மைக்கு மாறான உள்நோக்கத்துடனான புரளிகள் அனைத்தையும் தகர்த்து, எடப்பாடி பழனிசாமியின் 2ஆண்டுகால இடையறா உழைப்புக்கும், மக்கள் தொண்டுக்கும் கிடைத்த மகோன்னத அங்கீகாரமே இந்த வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - திமுக ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட அனைத்தையும் பாஜகவே செயல்படுத்தியதாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் மேற்கொண்ட பொய் பரப்புரையால் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்திற்கு தொடர்ந்து ஈபிஎஸ் - ஓபிஎஸ் சேவையாற்ற மக்கள் இடைத்தேர்தல் மூலம் வாய்ப்பளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் டோக்கன் மூலம் வெற்றி பெற்றதைப் போல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் டோக்கன் கொடுத்து ஆக்கிரமித்துவிடலாம் என நினைத்தவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு மக்கள் முடிவுக்கட்டிருப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சாடியும் நமது அம்மாவில் எழுதப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என ஏற்று குறைகளை களைந்து, 2021ல் அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்ய உளமாற உறுதி ஏற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.