நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருவேறு விபத்துகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக அருகிலிருந்த ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிக்கால் - நத்தம் சாலையில் உள்ள தனியார் நூற்பு மில் ஒன்றுக்கு களங்கானி, ராசிபுரம் பகுதியிலிருந்து சிலர் வேன் ஒன்றில் வந்துகொண்டிருந்துள்ளனர். வழியில் திம்மராவுத்தன்பட்டி என்ற இடத்தில் வேன் திரும்பும்போது மழை ஈரத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. இதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 17 பேரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கை கால் முறிவு மற்றும் தலை காயம் அடைந்த 10 க்கும் மேற்பட்டவர்களை ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். சாதாரண காயமடைந்த நபர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: சாலைகளை சூழ்ந்த மழைநீர்
இதேபோன்று திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் என்ற இடத்தில் வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த கார் ஒன்று நாய் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, சென்டர் மீடியனில் மோதி குமாரபாளையத்தை சேர்ந்த சரவணன் நவீன் ராஜ் ஓட்டுனர் ராஜசேகர் ஆகியோர் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இருவேறு விபத்துக்களில் 20க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் காயமடைந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனோஜ்கண்ணா