actor vijay, Nainar Nagenthiran file image
தமிழ்நாடு

“விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணிக்கு அழைப்பு விடுப்போம்”- பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன்

“தேர்தல் நேரத்தில் விஜய் நின்றால் கூட்டணிக்கு அழைப்பு விடுப்போம்” என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், நெல்லை தொகுதி எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

PT WEB

நெல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத் துறையை அரசு பயன்படுத்தவில்லை. முதல்வர் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அதனை ஏற்றுகொள்ள முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. அதனால் பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர். தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

Nainar Nagenthiran

’நாளைய முதல்வர்’ என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆசைப்படுவதில் தவறில்லை. தேர்தல் நேரத்தில் விஜய் தேர்தலில் நின்றால் கூட்டணிக்கு அழைப்பு விடுப்போம். பாஜக எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பாஜக மதவாத கட்சி அல்ல. நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு எனச் சொல்வது தவறு. அரசியலுக்கு வருவது அவரவர்களுடைய விருப்பம்.

நடிகர்கள் மட்டுமல்ல, கரகாட்டம் ஆடுபவர்கள் உள்ளிட்ட எந்த துறையைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்தபின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

நெல்லையில் பருவமழை பெய்யவில்லை; தவறிவிட்டது. குளங்களில் நீர் இருப்பு இல்லை. தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது, வறட்சி மாவட்டமாக அறிவிப்பது உள்ளிட்டவைகளுக்காக முதல்வரைச் சந்திக்க உள்ளோம்.

cm stalin

ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ராஜ்பவன் மாறுவதாக சொல்வது முற்றிலும் தவறு. சில சட்டத் திட்டங்களில் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் சில முரண்பாடுகள் உள்ளன. ’வேந்தர் அதிகாரம் ஆளுநருக்கு வேண்டும்’ என கருணாநிதிதான் தெரிவித்தார். தற்போது கூடாது என்கின்றனர். அந்தக் காலத்தில் இருந்தே இந்த பிரச்னை நீடித்து வருகிறது” என்றார்.