இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இயற்கை விவசாயத்தையும் பாரம்பரிய சிறு தானியங்களை பயிரிடும் விவசாயிகளை நபார்டு வங்கி ஊக்கப்படுத்தி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக கொரோனா காலக் கட்டத்திலும் யூடியூப் வெப்சைட் உள்ளிட்ட இணையம் வழியாக விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளையும் நபார்டு வங்கி வழங்கி அவர்களுக்கு தேவையான கடனுதவி உள்ளிட்டவைகளை அளித்து வருகிறது. இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
புதுக்கோட்டை மார்த்தாண்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நபார்டு வங்கி சார்பில் தொண்டு நிறுவனங்கள், வங்கியாளர்கள், வங்கி சார்ந்த நிறுவனங்கள், விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் வாழ்வாதாரம் திட்டங்கள் என்னென்ன வகையில் செயல்படுகின்றன? அந்தத் திட்டங்களை எவ்வாறு மேலும் நல்ல முறையில் அதிகப்படுத்தலாம் என்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் என்னென்ன என்று ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் பேசியபோது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது, மானிய திட்டங்களை எவ்வாறு பெறுவது நபார்டு வங்கியில் இலவச திட்டங்களை பெறுவது எப்படி, மற்ற வங்கிகளில் கடன்களை விவசாயிகளின் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது எப்படி என்பவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. மண் வளத்தை பார்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நபார்டு வங்கியில் பல்வேறு இலவச திட்டங்கள் உள்ளன.
இயற்கை விவசாயத்தால் விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதோடு அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை உண்பதால் உடல் நலமும் பாலாகமல் இருக்கும். தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் கூட இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து உள்ளனர்.
மேலும் அதில் ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கையான முறையில் செய்யக்கூடிய விவசாயத்தை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளனர். பாரம்பரிய முறையில் பாரம்பரிய சிறுதானிய பயிர்களை பயிரிடும் விவசாயிகளை நபார்டு வங்கி ஊக்குவிக்கும். நபார்டு வங்கி குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நபார்டு வங்கியின் எந்த ஒரு திட்டத்தை பெற வேண்டும் என்றாலும் விவசாயிகளுக்கு தகுந்த முறையில் பயிற்சி பெற்று அதற்கு பின்னரே அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் விவசாயிகளுக்கு யூடியூப் வெப்சைட் உள்ளிட்ட இணையம் வழியாகவும் நபார்டு வங்கி விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு தேவையான கடன் உதவி உள்ளிட்ட பல்வேறுவற்றை செயல்படுத்தி வருகின்றது" என்றும் தெரிவித்தார்.