பதினேழு பேர் மரணத்திற்கு காரணமான ஆபத்தான சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என கடந்த 1998ம் ஆண்டே கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முறைப்படி புகார் மனு அளிக்கப்பட்டதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “17 பேர் மரணத்திற்கு காரணமான சுற்றுச்சுவர் குறித்து கடந்த 1998ம் ஆண்டே கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முறைப்படி புகார் மனு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடமும் அப்பகுதி மக்கள் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால், அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அதனால்தான் இத்துயர சம்பவம் விபத்து இல்லை என்கிறோம். நேரில் ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் இச்சுவர் குறித்து யாராவது புகார் அளித்துள்ளனரா என ஆய்வு செய்யப்படும் என்றார். நான் ஆதாரத்துடன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.