சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது காவலர் தாக்கியதில் முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாக்குதல் நடத்திய எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வியாபாரியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.
குடிப்பழக்கமுடைய இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலைப் பகுதிகளில் மது அருந்தி விட்டு மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முருகேசன் மற்றும் இவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த போலீஸார், முருகேசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடல் நிலை மோசமடைந்ததால், இன்று (புதன்கிழமை) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.