முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து சீறிப்பாய்ந்த குடிநீர் தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து வீணானது.
முல்லைப்பெரியாறு அணை நீர், தேக்கடி ஏரியில் இருந்து கால்வாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு குமுளி மலையில் உள்ள "பென் ஸ்டாக்" குழாய்கள் மூலம் லோயர்கேம்ப் பகுதிக்கு கீழிறக்கப்படுகிறது. அங்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு பிரதான குழாய்கள் வழியே கம்பத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாயில், கூடலூர் அருகே திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் குழாயில் இருந்து சீறிப்பாய்ந்த குடிநீர், தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து வீணானது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து குழாயின் உடைப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. உயர் அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும் ஒரிரு நாட்களுக்கு கம்பம் பகுதி குடிநீர் விநியோகத்தில் சற்று பாதிப்பு ஏற்படும் எனவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.