தமிழ்நாடு

 “ஆந்திராவில் முகிலனை போலீசார் அடைத்து வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்” - மனைவி பூங்கொடி

 “ஆந்திராவில் முகிலனை போலீசார் அடைத்து வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்” - மனைவி பூங்கொடி

webteam

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்தநிலையில், தன்னுடைய கணவரை நீதிமன்றத்தில் அரசு ஒப்படைக்க வேண்டும் என அவரது மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளரை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது நண்பர் சண்முகம் கூறுகையில், “ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்றேன். அப்போது திருப்பதியில் முகிலனை பார்த்தேன். அவர் கோஷமிட்டு கொண்டே ஆந்திரா போலீசாருடன் சென்று கொண்டிருந்தார். வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார். இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவித்தேன். அவர் ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாம் என கேட்டார். ஆனால் ரயில் புறப்பட்டதால் எடுக்கமுடியவில்லை என தெரிவித்தேன். ஆந்திர போலீசாரின் பிடியில் முகிலன் இருக்கிறார் என திட்டமிட்டமாக தெரிகிறது” என்றார். 

இதுகுறித்து முகிலன் மனைவி பூங்கொடி கூறுகையில், “சண்முகம் எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கிறார். அவரது பள்ளி சகோதரர். எனக்கும் 25 வருடமாக அந்த அண்ணனை தெரியும். இன்று மாலை எனக்கு சண்முகம் போன் செய்தார். அப்போது உனக்கு முகிலன் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா என கேட்டார். நான் இன்னும் தகவல் ஏதும் தெரியவில்லை என்று கூறினேன்.

அதற்கு நான் திருப்பதியில் முகிலனை பார்த்தேன் எனவும் அவரை 3 போலீசார் கைது செய்து அழைத்து செல்கிறார்கள் எனவும் தெரிவித்தார். முகிலன் தமிழில் முழக்கம் போட்டு கொண்டு சென்றதாக கூறினார். முகிலனை நீதிமன்றத்தில் அரசு ஒப்படைக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம். ஆந்திராவில் அடைத்து வைத்திருந்து இப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை கொண்டுவந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.