வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை அனுமதிக்க வேண்டாம் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
தேசத் துரோக வழக்கில், வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை சசிகலா புஷ்பா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கில் ஈராண்டு சிறை தண்டனை பெற்றிருந்தால்தான், ஒருவர் தகுதியிழப்பு செய்யப்படுவார் என்ற போதிலும், அறநெறி அடிப்படையில், வைகோவை பதவியேற்க அனுமதிக்க வேண்டாம் என்று சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
வைகோ, தேசத்திற்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் என்றும், பிரதமருக்கு எதிராகவே பலமுறை கடுமையான வார்த்தைகளைப் பேசியுள்ளார் எனவும் சசிகலா புஷ்பா சுட்டிக்காட்டியுள்ளார். தேசத்திற்கு எதிராகவும், பிரதமரை விமர்சித்தும் வைகோ பேசிய பேச்சுகள் தமிழ்நாட்டு சமூகத்தை தவறான பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் வெங்கையா நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவைக்கான வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்படுமா ? என்ற சந்தேகம் இருந்த நிலையில், மனுவும் ஏற்கப்பட்டது. இதனால் அவர் மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.