திருத்தணியில் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட திமுக எம்.பி.கனிமொழி, “ஒன்றிய அரசு, பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இதுவரை ஒன்றிய அரசு பெண்களுக்கென எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வந்ததில்லை” என்று கூறியுள்ளார்.
திருத்தணி நகராட்சியில் பெரியார் நகர் பகுதியில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுர மின் விளக்குக்காக, அப்போது ராஜ்யசபா உறுப்பினராக இருந்த கனிமொழி ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தற்போது அவரே நேரில் வந்து உயர் கோபுர மின் விளக்கை திறந்தும் வைத்தார்.
இதையும் படிங்க: புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கிய எம்.பி. கனிமொழி
மின் விளக்கை திறந்து வைத்ததை தொடர்ந்து தி.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணியின் சார்பில் தி.மு.க மகளிரணியை சேர்ந்த 500 பேருக்கு எவர்சில்வர் குடம், தையல் மெஷின் ஆகியவற்றை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார் கனிமொழி. அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது, “ஒன்றிய அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இதுவரை ஒன்றிய அரசு பெண்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வந்ததில்லை. இட ஒதுக்கீட்டை கூட அமல்படுத்தவில்லை. சொல்லப்போனால் அதற்கான முயற்சிகளைக்கூட அவர்கள் செய்யவில்லை” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும் பேசுகையில், “33 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் உள்ளது. இதனால் அனைத்து துறைகளிலும் பெண்கள் தமிழகத்தில் சிறந்து விளங்குகின்றனர். தி.மு.க தலைமையிலான அரசு பெண்களுக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது ஆட்சிக்காலத்தில் பெண்களின் வாழ்க்கை வளம் பெற அனைத்து வழிவகைகளையும் செய்திருந்தார். தற்போதுள்ள நம் தமிழக முதல்வரும் பெண்களுக்கு இலவச பேருந்துகள், வேலைவாய்ப்பில் 40% இட ஒதுக்கீடு என பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகத்தை உருமாற்றி உள்ளார்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.