தமிழ்நாடு

கத்தார் உலகக்கோப்பை: கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ - அரையிறுதியில் மொரோக்கோ, பிரான்ஸ்!

கத்தார் உலகக்கோப்பை: கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ - அரையிறுதியில் மொரோக்கோ, பிரான்ஸ்!

webteam

உலக கோப்பை கால்பந்து தொடரில் மொரோக்கோ, பிரான்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ அணி வெற்றி பெற்றது. அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்-மொராக்கோ அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 42ஆவது நிமிடத்தில் மொரொக்கோ அணி கோல் அடித்தது. முதல் பாதியில் மொரோக்கோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ 51ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டார்.

இதனையடுத்து போர்ச்சுக்கல் அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது. மொரோக்கோ கோல்கீப்பர் தடுப்புச் சுவராகவே செயல்பட்டு வரும் பந்தினை கச்சிதமாக தடுத்து நிறுத்தினார். இறுதியாக, 1-0 என்ற கணக்கில் மொரோக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற தகுதியை மொராக்கோ படைத்துள்ளது. போர்ச்சுகல் அணியின் தோல்வியால் ரொனால்டோ கண்ணீர் மல்க வெளியேறினார்.



மற்றொரு போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 17 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. அனல் பறந்த போட்டியின் இரண்டாவது பாதியில் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.

78ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றது. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.