தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ அப்பாவு பதவியேற்றுக்கொண்டார்.
சபாநாயகரை அவை முன்னவர் துரைமுருகனும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர். இவர் 1996, 2001,2006,2021 ஆகிய தேர்தல்களில் ராதாபுரம் எம்.எல்.ஏவாக இருந்தவர். அவரைத்தொடர்ந்து துணை சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார். இவர் திருவண்ணாமலை தொகுதியில் 4 முறையும் கீழ்பென்னாத்தூரில் 2 முறையும் எம்.எல்.ஏவாக இருந்தவர்.
புதிதாக பதவியேற்ற சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர் பேசியபோது, ’’சட்டப்பேரவையில் சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். ஊடக விவாதங்களில் கருத்தோடும் சுவையோடும் பேசும் உங்களை கவனிப்போரில் நானும் ஒருவன். சபாநாயகராக அப்பாவு அமர்ந்திருப்பதை பார்க்கும்போது என் நெஞ்சம் பூரிப்படைந்துள்ளது. சுதந்திரத்தின் அடையாளமான நீங்கள் பேரவையில் அமர்ந்துள்ளீர்கள். அண்ணாவின் தம்பிகளாகிய எங்களுக்கு ஆணவம் இருக்காது; கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் அவையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று பேசினார்.
கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்த சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.