தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: விரைவில் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம்: விரைவில் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நிவேதா ஜெகராஜா

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக ஜூலை 12-ம் தேதியன்று தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றிருந்தது. அதில் மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு எதிர்க்கும் என்பது உள்பட 3  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இணைந்து டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதி குழு டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை பிரதமரை மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என சொல்லப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் என்றைக்கு பிரதமரை சந்திப்பார் என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை என்பதால் இன்று மாலை சென்னையில் நடைபெறும் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அது சொல்லப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் கூட்டத்தின் முடிவில், முதல்வர் யாருடன் சென்று பிரதமரை சந்திப்பார் என்றைக்கு சந்திப்பார் என சொல்லப்படலாம்.

வரும் திங்கட்கிழமை (ஜூலை 19ம் தேதி) நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால் அதற்கு முன்னர் பிரதமரை முதல்வர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவ்விவகாரம் குறித்து  பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி சென்றிருக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினும் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்கவிருப்பது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவும், தீர்மானமாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அதை எதிர்த்து வருகிறது. அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் தொடர்ந்து மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் இவ்விவகாரம் தொடர்பாக சந்தித்தவண்ணம் இருக்கின்றனர்.