தமிழ்நாடு

மத்தியக்குழு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்தியக்குழு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

காலில் விழுந்து கதறிய மக்களின் கண்ணீரின் வலியை உணர்ந்து விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று
மத்தியக்குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் திமுகவினர் மேற்கொண்டுவரும்
களப்பணியை குறிப்பிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இரண்டு வாரங்கள் கடந்தும், இயல்பு நிலை திரும்பாமல்
இருட்டிலும், சேற்றிலும், சகதியிலும் மக்கள் வாழும் அவலம் தொடர்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரணப் படுக்கையில்
தவிக்கின்ற புயல் பாதித்த பகுதிகளுக்கு மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம் என்று
கூறியுள்ளார். 

பிரதமரிடம் முதலமைச்சர் கேட்ட தொகை உடனடியாக கிடைக்கவும், புயலின் முழுமையான பாதிப்புளை மதிப்பிட்டு மக்களின்
வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக்குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது என்று
தெரிவித்துள்ளார். காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும், வலிமையையும் உணர்ந்து
ஆய்வுக்குழுவினர் தங்கள் அறிக்கையை விரைந்து சமர்ப்பித்து விரைவான நிவாரணம் கிடைக்க உதவிட வேண்டும் என்று
ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.