தமிழ்நாடு

ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக் கூடாது: அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கக் கூடாது: அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Sinekadhara

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல்கூட்டம் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளது என்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நாளை முதல் பொதுமுடக்கத்தை செயல்படுத்துவது மற்றும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுதவிர புதிய திட்டப் பணிகள், மக்கள் நலப்பணிகள் குறித்தும், குறிப்பாக கொரோனா நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.