முதலமைச்சரும் அமைச்சர்களும் தங்களின் கடமைகளை மறந்து உட்கட்சிப் பிரச்னையில் உறைந்து போயுள்ளனர் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ள சூழலில், அரசு நிர்வாகம் முடங்கியிருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். எனவே, முடங்கி கிடக்கும் மாநில அரசு நிர்வாகத்தை, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சென்று சந்திக்க மறுக்கும் முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. இரட்டை இலை சின்னத்திற்கு 60 கோடி பேரம் என செய்தி வந்தவுடன், அமைச்சர்கள் இரு பிரிவுகளாக தனித்தனியாக கூடி பேசுகின்றனர். முதலமைச்சரும், அமைச்சர்களும் தங்கள் கடமைகளை மறந்து உட்கட்சி பிரச்னையில் உறைந்து போயுள்ளனர்.அரசியல் சட்டப்படி மாநில அரசு நிர்வாகம் செயல்படுகிறதா? என்ற மிகப்பெரிய சந்தேகமே இப்போது உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள ஸ்டாலின், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, முடங்கிக் கிடக்கும் மாநில அரசு நிர்வாகத்தை செயல்பட வைக்க ஆளுநர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.