தமிழ்நாடு

இறக்குமதி வரி ரத்து: சிறுமி மித்ராவுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது ரூ.16 கோடி ஊசி!

இறக்குமதி வரி ரத்து: சிறுமி மித்ராவுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது ரூ.16 கோடி ஊசி!

Veeramani

குமாரபாளையத்தில் முதுகு தண்டுவட நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் -  பிரியதர்ஷினி தம்பதியினரின்  2வயது மகள் மித்ராவின் சிகிச்சைக்கு தேவையான 16கோடி ரூபாய் சமூக வலைதளங்கள் மூலம் நிதி சேகரித்த நிலையில், இன்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட (ZOLGENSMA)ஊசி சிறுமி மித்ராவிற்கு செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சதீஷ்குமார் பிரியதர்ஷினி தம்பதியின் மகள் மித்ரா இரண்டு வயதான நிலையில் முதுகுத்தண்டுவட தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது, கோவை மருத்துவமனை ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பிய டெஸ்ட் மூலமாக தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நோய்க்கு மருந்து செலுத்த வேண்டுமானால் இந்திய மதிப்பில் வரிகள் உட்பட 22 கோடி வரை செலவாகும் என்று தெரியவந்தது. இந்த மருந்தின் கட்டணமான 16 கோடியை சமூக வலைதளங்கள் வாயிலாக மித்ராவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிதியினை கிரவுட் ஃபண்டிங் முறையில் திரட்டினார்கள்.

மூன்று லட்சத்திற்கும் மேலானவர்கள் மித்ராவின் மருத்துவ செலவிற்காக நிதியுதவி செய்திருந்த நிலையில் மத்திய அரசு ZOLGENSMA  மருந்து இறக்குமதி வரியான ரூ.6 கோடி வரை தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் இந்த மருந்து வாங்க பணம் பெங்களூர் மருத்துவமனை வாயிலாக அனுப்பப்பட்டு மருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இன்று மதியம் சிறுமி மித்ரா உயிரை காக்கும் வகையிலான ZOLGENSMA மருந்தினை பெங்களூர் மருத்துவமனையில் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மித்ராவின் உயிரை காக்க நிதி உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், வரி ரத்து செய்து கொடுத்த அரசியல் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.