தமிழ்நாடு

கேரளா வழங்கும் நீரை தமிழக அரசு மறுக்கவில்லை - அமைச்சர் வேலுமணி

கேரளா வழங்கும் நீரை தமிழக அரசு மறுக்கவில்லை - அமைச்சர் வேலுமணி

webteam

கேரள அரசு வழங்கும் நீரை தமிழக முதலமைச்சர் மறுத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. அத்துடன் நிலத்தடி நீரும் சில இடங்களில் வற்றியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. சென்னைக்கு தண்ணீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில் இருப்பதால் சென்னைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளா அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முன்வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரளா முதலமைச்சரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்திற்காக கேரளா அரசு உதவ 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்ப தயாராக உள்ளது. எனினும் தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் அவர்களிடம் இருப்பதால் இது தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்” என்று பதிவிடப்பட்டுள்ளது. 

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் வேலுமணி, கேரள அரசு வழங்கும் நீரை தமிழக முதலமைச்சர் மறுத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், ''தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் உதவியை கேரளாவிடம் கோரினோம். ஆனால் அதன் தேவை இல்லாமலே சமாளித்து வருகிறோம். மேற்கொண்டு தண்ணீர் உதவி தேவைப்பட்டால் கேரள அரசிடம் உதவி கோரப்படும். நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்துக்கு பின் தமிழக அரசின் முடிவு அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.