அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான டெண்டர் மட்டும் தற்போது நடைப்பெற்றுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் 600க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக ஒரு நாளைக்கு 3000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம், கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் என்ற முறையில் தனியார் பங்களிப்புடன் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு 200 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும்(சிஐடியு), பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தத் திட்டத்தில் தனியார் மயம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த, புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் உலக வங்கி வழங்கிய கருத்தின் அடிப்படையில், அரசினுடைய வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கினால் என்ன சாதக பாதகங்கள் ஏற்படும் என்பதை ஆராய்வதற்கு ஒரு ஆலோசனை குழு அமைப்பதற்கான டெண்டர் தான் நடைபெற்று இருக்கிறது.
எல்லாரும் நினைப்பது போல இது தனியார் பேருந்துகளை விடுவதற்கான டெண்டர் அல்ல. எனவே தனியார் மயம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த பேருந்துகள் அரசு பேருந்துகள் அரசு பேருந்துகளாகவே இயக்கப்படும். அரசு பேருந்துகளிலே பணியாற்றக்கூடிய போக்குவரத்து பணியாளர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்களாகவே இருப்பார்கள். எந்த ஒரு பிரச்னையும் இன்றி இது தொடரும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கக்கூடிய பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் தொடரும். கலைஞரால் தொடங்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டமும் தொடரும். எனவே இதில் எந்த குறைபாடும் இல்லாமல் சிறப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்.