தமிழ்நாடு

 ‘ஆகம விதியே பின்பற்றப்படும்’ - அத்திவரதர் குறித்து ஜீயருக்கு அமைச்சர் பதில்

 ‘ஆகம விதியே பின்பற்றப்படும்’ - அத்திவரதர் குறித்து ஜீயருக்கு அமைச்சர் பதில்

webteam

அத்திவரதரை எங்கு வைப்பது என்பது குறித்து ஆகம விதியில் உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்தில் இருந்து 40 வருடங்களுக்குப் பின்னர் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 48 நாட்கள் அத்திவரதரை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இதனிடையே 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்திருந்தார். மேலும், “கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் புதைத்தோம், தற்போது அது தேவையில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்கவுள்ளோம்” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அத்திவரதர் வைபவ விழாவிற்காக கூடுதலாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திட கடந்த ஒரு மாதமாக மாவட்ட நிர்வாக சார்பாகவும், இந்து அறநிலையத்துறை சார்பாகவும் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

கூடுதலாக பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்ற காரணத்தினால் கூடுதல் வசதிகள் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்தார். அத்திவரதரை பூமிக்கு அடியில் வைப்பது தொடர்பாக பேசுகையில், ஆகம விதிப்படி என்ன இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டில் மாறுதல் இருக்காது எனத் தெரிவித்தார்