ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தகவல் தொழில் நுட்ப துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். இதில் நரேந்திர மோடி மற்றும் முருகன் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் முருகன், ”சென்னிமலை முருகன் கோயில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலில்தான் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கந்தசஷ்டி கவசத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் இணைந்து வெற்றிவேல் யாத்திரை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல இந்த கோயில் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் முருக பக்தர்களை அவமதித்துள்ளனர். இந்த புனித தலத்தை பெயர் மாற்றுவோம் என தெரிவித்ததால் பக்தர்கள் கோபமுற்று தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இது தமிழக அரசின் தோல்வி என்றும் சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது தடுக்கப்பட்டிருக்கும்” என்றார். ஜெப கூட்டம் நடத்தியவர்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர், சென்னிமலை புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என கூறினார். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. கிறிஸ்துவ அமைப்பினர் கூறியதை கண்டித்து சென்னிமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சனாதன விவகாரம் குறித்து பேசுகையில், ”சனாதனத்தை ஒழிப்போம் என்று மகாராஜாக்கள், இளவரசர்கள் பேசுகிறார்கள். ஆனால், சனாதனம் தான் தேசம் மிகப்பெரிய அளவிற்கு முன்னேறுவதற்கு காரணம். சனாதானம் அனைவரும் சமம், அனைவரும் ஒன்று என்று சொல்கிறது. அத்துடன் வாழ்க்கை நெறிமுறையை கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் தினமும் மீனவர்கள் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் மோடி வந்த பிறகு மீனவர்கள் மீது ஒரு துப்பாக்கி சுடு சம்பவமும் நடக்கவில்லை. முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எல்லைதாண்டி செல்வதால் கைது செய்யப்படும் போது வெளியுறவு துறை மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழக மீனவர்கள் உடனடியாக மீட்கப்படுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்க 1.3 கோடி மதிப்புள்ள ஆழ்கடல் படகு மானியம் வழங்கப்படுகிறது. மீன் வளத்தை பெருக்க fish launching கொண்டுவந்துள்ளோம். மேலும் கடல் கொள்ளையை தடுக்க கடலோர பாதுகாப்பு படை தங்களின் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்” என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரரை பார்த்து ஜெய் ஶ்ரீ ராம் என இந்திய ரசிகர்கள் முழங்கிய விவகாரம் குறித்து பேசுகையில், “ஜெய் ஶ்ரீ ராம்.. ஜெய் ஶ்ரீ ராம்.. ஜெய் ஶ்ரீ ராம்” என பதிலளித்தார்.
”அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என்பது தனி சுதந்திரமான அமைப்புக்கள் என்றும் அவர்களுக்கு கிடைத்த தகவலை வைத்து சோதனை செய்கிறார். இந்த சோதனையால் ஒரு அமைச்சர் இன்றும் சிறையில் உள்ளார். இது நமக்கு வேதனைக்குரிய விஷயம். நீலகிரி எம்பி ராசா சொத்து முடக்கப்பட்டுள்ளது. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் வீட்டில் 1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அரசு சொல்கிறது. இது மக்களுடைய பணம். திமுக என்றால் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, வாரிசு அரசியல், மக்களின் பணத்தை திட்டத்தை சுரண்டுவது தான் கொள்கையாக உள்ளது” என எல்.முருகன் விமர்சித்தார்.