தமிழ்நாடு

"அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன்..ஆனால்” - மா.சுப்ரமணியன்

"அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன்..ஆனால்” - மா.சுப்ரமணியன்

நிவேதா ஜெகராஜா

“டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில் அதில் ஊழல் நடந்துள்ளது, நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் காரணங்களால், தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சம்பந்தமில்லாத திமுகவை சேர்ந்த ஆடிட்டர் சண்முகராஜ், அண்ணாநகர் கார்த்திக் விதிமீறலில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றார்கள்” என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

மேலும் பேசுகையில், g square நிறுவனத்திற்கு விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கப்படுவதில் அமைச்சர் முத்துச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்க உள்ளோம். திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. முதலமைச்சர் குடும்பத்திற்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா நியூட்ரீஷியன் கிட், வெறுமனவே நியூட்ரீஷியன் கிட் என இப்போது அழைக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள Pro pl health mix எனும் தனியார் நிறுவன பொருளுக்கு பதிலாக ஆவின் நிறுவன health mix பயன்படுத்தலாம் என பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகள், மாநில அரசின் திட்டக் குழுவினர் மார்ச் மாதம் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஏப்ரல் மாதம் அரசின் நிர்பந்ததாத்தால் அதை நிராகரித்துள்ளனர்.

கர்ப்பிணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு 23,88,000 கிட்களை தமிழக அரசு வாங்குகிறது. இதில் அனிதா டிக்ஸ் காட் மூலம் கர்ப்பிணிகளுக்கு 8 பொருட்கள் வழங்கப்படுகிறது. அனிதா டிக்ஸ் காட் நிறுவனத்திற்கு ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது , உயிருக்கே அச்சம் தரும் பொங்கல் தொகுப்பை வழங்கியது இந்த நிறுவனம்தான். ஆவின் பொருளை காட்டிலும் தனியார் health mix 60 சதவீதம் விலை அதிகம். திமுகவை சேர்ந்த ஆடிட்டர் சண்முகராஜ் , திமுக எம்எல்ஏ மகன் அண்ணாநகர் கார்த்திக்தான் முதல்வர் குடும்பம் சார்பாக பேசுவதாக கூறி இந்த விதிமீறலை செய்துள்ளனர். ஆவினுக்கு வழங்காமல் pro pl health mix க்கு மீண்டும் கொடுத்ததால் தமிழக அரசுக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் 100 கோடி பணம் கைமாறியுள்ளது, அது யாருக்கெல்லாம் சென்றிருக்கும் என்பது இனிதான் தெரிய வரும்.

நியூட்ரீஷியன் கிட்டில் கர்ப்பிணிகளுக்கான இரும்புச் சத்து டானிக்குகள் அனிதா டிக்ஸ் காட் மூலம் வாங்கியதால் 32 கோடி மாநில அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இவை இரண்டின் காரணமாக மொத்தமாக தமிழக அரசுக்கு 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. G square முன்னேற்றக் கழகமாக சென்னை cmda மாறி உள்ளது. நிலத்தை பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 200 நாள் ஆகும். ஆனால் g square கோவையில் 122 ஏக்கர்களுக்கான லே அவுட் 8 நாளிலே பெற்றுள்ளனர். G square ன் 15 பெரிய மனைநில வளர்ச்சிப் பணிகளை 20 நாளுக்குள் செய்துள்ளனர் , திமுகவின் விஞ்ஞான ஊழல் இது. Cmda வில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூறியது. ஆனால் gsqare பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமே ஆன்லைன் பதிவு open ல் இருக்கிறது. G square க்கு உதவ திமுகவினர் cmda வில் , Ceo எனும் புதிய பொறுப்பை உருவாக்கியுள்ளனர் .

G square 6 நிறுவனத்தை புதிதாக தொடங்கியுக்ளனர். ஐதராபாத் , பெங்களூரில் அவற்றை தொடங்கியுள்ளனர். வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் கூற வேண்டும். அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். sun shine holding india, Llp hyderabad, Max space, Mannorr white field போன்ற நிறுவனங்கள் gsquare சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுகவிற்கு முன்னர் 2ஜி முடிவுரை எழுதியது போல , தற்போது g square என்ன செய்யப்போகிறது. அதை காத்திருந்து பார்க்க வேண்டும். ஆவின் பொருளை புறக்கணித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்க உள்ளோம். நடவடிக்கை இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம்.

G square குறித்து குற்றம்சாட்டினால் பத்திரிகையாளர்கள் மீது கூட அவசரம் காட்டி வழக்கு பதிகின்றனர். பாஜக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. செய்தித்தாள் விளம்பரங்களில் G square விளம்பரம்தான் இருக்கிறது , அவர்களை தவிர யாருக்கும் பெரிய அளவிலான மனைநிலங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அம்மா nutrition கிட் மா.சுப்பிரமணியனின் துறைதான் என்றாலும் அவர் மீது நாங்கள் புகார் வைக்கவில்லை. ஏனெனில் இரு தனி நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் கமிஷன் பெற்றாரா என தெளிவுபடுத்த வேண்டும்.

G square ல் அமைச்சர் முத்துசாமி மீது எங்களது நேரடி குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார் என சொல்லவில்லை , முதல்வர் தலையிட வேண்டும் என்று சொல்கிறோம் , முதல்வர் குடும்பத்தினருக்கு இதில் தொடர்பு உள்ளது, எனவே முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்தை இன்னும் ஏன் முதல்வர் தடை செய்யவில்லை. 20 ம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல் , சட்ட மீறல் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம்” என்றுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார். முறைகேடு நடந்து இருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும்.

இல்லை என்றால் அவர் மற்ற துறைகளின் கூறி வரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்து விடும். எனவே டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது, நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது. தவறு நடைபெற்று உள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது. 15 நாட்களுக்கு முன்னாள் நாவலூர் பகுதியில் ஒருவருக்கு B4 வகை கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது 4 நபர்களுக்கு B4 வகை வைரஸ் மற்றும் 8 நபர்களுக்கு B5 வகையிலான பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர்” என தெரிவித்தார்.