தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக்கொள்வதற்காகவுமே சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் இருப்பதாகவும், அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும், முறையற்ற நிர்வாகத்தை, முறைப்படுத்தவுமே சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 10, 15 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்துவது சரியாக இருக்காது என்பதற்காகவே, ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக்கொள்வதற்காகவுமே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதற்கோ, யாரையும் சங்கடப்படுத்துவதற்கோ சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று பேசிய அமைச்சர் கே.என்.நேரு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், அதை சிறப்பாக நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அம்மா உணவக பணியாளர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும், அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினால், அது நிவர்த்தி செய்யப்படும் என்றும் எந்த ஒரு அரசு நிலத்தையும் தனியாருக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நிகழ்வில் அதிகாரிகள் ஷிவ்தாஸ் மீனா, பொன்னையா, மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு 10 வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.
இதனிடைஏ, 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடிய நிலையில் சொத்து வரி உயர்வால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.