தமிழ்நாடு

“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்

“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்

webteam

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அமைச்சர் வேலுமணி பேசும் போது, “சென்னை குடிநீருக்காக தரவேண்டிய கிருஷ்ணா நதிநீரை தரக்கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கொடுத்தோம். ஜெகன் மோகன் ரெட்டியும் தண்ணீர் விடுவதாக உடனடியாக ஒப்புக்கொண்டு, அதிகாரிகளை கூப்பிட்டு உத்தரவிட்டார். இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாகும். இதனால் சென்னை குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எங்களை பொருத்தவரை இந்த தேர்தலில் (வேலூர் தேர்தலில்) நாங்கள் தான் வெற்றி பெற்றோம். திமுக பண நாயகத்தை நம்புகிறது. அதன்மூலம் வெற்றி பெற்றுள்ளது. இதனை ஒரு மோசமான வெற்றி அல்லது மோசடியான வெற்றி எனலாம். கடந்த முறை நிறைவேற்ற முடியாதவற்றை கூறி வாக்குகளை பெற்றனர். இந்த முறை அதை பெறமுடியவில்லை. 125 கோடி ரூபாய் செலவு செய்து 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றால், இது ஒரு வெற்றியா ? மக்கள் மனதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். திமுக தேய்பிறையாக சென்றுகொண்டிருக்கிறது. அதிமுக வளர்பிறையாக செல்கிறது. பழம் நழுவி பாலில் விழும் என நினைத்தோம். அது நழுவி கீழே விழுந்துவிட்டது. அடுத்த முறை பாலில் விழும்” என்று கூறினார்.