செங்கல்பட்டு, ஆம்பூர் மற்றும் கர்நாடகா மாநிலம் விஜயாபுராவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விரிவாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவிக்கையில், ’செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. மேலும் பெங்களூரு அருகேயுள்ள விஜயாபுராவிலும், செங்கல்பட்டை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரின் சுற்றுவட்டாரப்பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டை பொறுத்தவரை 3.2 ரிக்டர் அளவிலும், கர்நாடகா விஜயாபுராவில் 3.1 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு என்பது பதிவாகியுள்ளது. காலை 6.52 மணிக்கு கர்நாடக மாநிலம் விஜயபுராவிலும், காலை 7.39 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நில அதிர்வு என்பது பதிவாகியுள்ளது. ” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேபாளம், அசாம், மணிப்பூரில் நேற்று நில அதிர்வு பதிவாகி இருந்த நிலையில் தற்போது கர்நாடகா மற்றும் தென் மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.