தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை 

உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை 

webteam

சுபஸ்ரீ வழக்கில் ஜாமீன் கோரி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். எனினும் ஜெயகோபால் கடந்த 14ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். இதனிடையே 15 நாட்களுக்குப் பின் அவரை கிருஷ்ணகிரியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரைத் தொடர்ந்து இவரது மைத்துனர் மேகநாதனையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின்னர் ஜெயகோபாலை வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்கள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிறது.