தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் - கோவை ரயில் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு - குறைக்க மக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் - கோவை ரயில் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு - குறைக்க மக்கள் கோரிக்கை

webteam

மேட்டுப்பாளையம்- கோவை இடையிலான பயணிகள் ரயில் சேவை கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் வழக்கமான கட்டணத்தில் ரயிலை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநகருக்கு தினசரி ஐந்து முறையும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஐந்து முறையும் என பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கான ரயில் கட்டணம் பத்து ரூபாயாக இருந்தது. கல்வி, வேலை, வியாபாரம் தொடர்பாக தினசரி பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் பயணித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு கடந்த பதினோரு மாதங்களாக இயக்கப்படவில்லை.

தற்போது கொரோனா பரவல் குறைந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்த பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. பேருந்துகளில் பயணிப்பது மக்களுக்கு கடும் சிரமத்தை உருவாகியுள்ளதால் பயணிகள் ரயில் சேவையினை மீண்டும் துவக்க வேண்டும் என ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வரும் பதினைந்தாம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு காலை 8.15 மணிக்கு மட்டும் ஒரே ஒரு முறை பயணிகள் ரயில் இயக்கப்படும் என்றும் பயணிகள் ரயில் கட்டணம் எக்ஸ்பிரஸ் கட்டணமாக முப்பது ரூபாயாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திடீரென மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பயணிகள் ரயில் சேவை வழக்கமான கட்டணத்தில் இயக்கப்பட வேண்டும், எப்போதும்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஐந்து முறையும் கோவையில் இருந்து ஐந்து முறையும் இயக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.