தமிழ்நாடு

மே மாதத்தில் இயல்புக்கு சற்று குறைவாக வெப்பநிலை இருக்கும் - வானிலை ஆய்வு மையத் தலைவர்

மே மாதத்தில் இயல்புக்கு சற்று குறைவாக வெப்பநிலை இருக்கும் - வானிலை ஆய்வு மையத் தலைவர்

Sinekadhara

தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வெப்பநிலை பதிவாகும். சூரியக்கதிர்கள் நேரடியாக வீசக்கூடிய காலகட்டத்தில் தரைக்காற்று அதிகமாக இருக்கும். அதனால் வெப்பம் அதிகரிக்கிறது. காற்றின் ஈரப்பதம், காற்றின் அளவு ஆகியவற்றைப் பொருத்து வெப்பநிலை அதிகரிக்கிறது. கணினியின் தரவுகளை வைத்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

வெப்பத்தை உணர்வதற்கான காரணம் குறித்து கூறியபோது, பதிவான வெப்பநிலை என்பது வேறு, மக்கள் உணரும் வெப்பநிலை என்பது வேறு. கடலோரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு காற்றின் ஈரப்பதம் ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. காற்றின் திசைவேகம் கடலிலிருந்து வீசினால் வெப்பநிலை குறைவாக இருக்கும். தரைக்காற்று வீசினால் வெப்பநிலை அதிகமாக இருக்கும். நகரமயமாதலும் நகர வெப்ப தீவு தாக்கத்தினால் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது என்று கூறினார்.

கோடை தாக்கம் வரும் நாட்களில் எவ்வாறு இருக்கும்? என்று கேட்டதற்கு, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களை கோடை காலம் என்று சொல்கிறோம். மே மாதத்தில் இயல்புக்கு சற்று குறைவாக வெப்பநிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மட்டும் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சராசரி. சில நாட்களில் இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வழு, திசை வேகம் பொருத்து வெப்பநிலை மாறும் என்று தெரிவித்தார்.

வடமாநிலங்களில் நூற்றாண்டு காணாத வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதற்கும் இங்கு வெப்பநிலை அதிகமாக பதிவாவதற்கும் தொடர்பு உள்ளதா? என்று கேட்டதற்கு, வட மாநில பகுதி என்பது வேறு; அதன் அமைப்பு வேறு. இந்தப் பகுதியில் இருக்கும் வெப்பநிலை அமைப்பு என்பது வேறு. இரண்டுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. வடமாநிலங்களில் வெப்ப அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லை. 2 டிகிரி 3 டிகிரி மட்டுமே அதிகமாக உள்ளது என்று விளக்கினார்.

எந்த நேரத்தில் வெப்பநிலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும்? என்றதற்கு, காலை 10 மணி வரையிலும், அதன்பின்பு மாலை 3 மணிக்கு பிறகும் வெளியே செல்வது நல்லது. இடைப்பட்ட அந்த நேரங்களில் சூரிய கதிர்கள் நேரடியாக தாக்கும். அதனால் பாதிப்பு ஏற்படும்.