தமிழ்நாடு

‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.!

‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.!

webteam

கோவையில் மகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரில் வேதவள்ளி என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி, தம்பி மாதவன் மற்றும் தனது 5 வயது மகள் கார்குழலியுடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வந்துள்ளார். வேதவள்ளி மனநலம் பாதிக்கப்பட்டதால் அவ்வப்போது குடும்பத்தினரை தாக்குவதாலும், பெற்ற மகளான கார்குழலிக்கு கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்ததால் வேதவள்ளியை விவகாரத்து செய்து அவரது 2வது கணவர் கண்ணன் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனநலம் பாதிப்புக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்று வேதவள்ளி சிகிச்சை அளித்து வந்தார்கள். 

இந்த நிலையில், 17ஆம் தேதி இரவு வேதவள்ளியின் 5 வயது மகள் கார்குழலிக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது பெற்றோரும், தம்பியும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, வேதவள்ளியை வீட்டிலேயே பூட்டிவிட்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தகவல் அறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, வீடு பூட்டி இருந்ததால் ஜன்னலை உடைத்து பார்த்தபோது, வீட்டில் தனியாக இருந்த வேதவள்ளி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். உடனே, வேதவள்ளியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் உள்ள டிவி உடைந்து, பொருட்கள் பல சிதறி கிடைந்ததுடன், ஆங்காங்கே ரத்தம் சிதறி இருந்ததும், வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலை, முகத்தில் அடிப்பட்டிருந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன், தம்பி மாதவன், தாய் லீலாவதி என தனி தனியாக ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

தந்தை ராமகிருஷ்ணனை வீட்டிற்கு நேரிலேயே அழைத்து வந்து இரவு நடந்ததை போலீசார் விளக்கி கேட்டனர். இதற்கிடையே, குழந்தை கார்குழலி பிரதேச பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக குடும்பத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், வேதவள்ளி தனது 5 வயது மகளை தலையணை கொண்டு கொலை செய்தும், தானும் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வேதவள்ளியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முதற்கட்ட தகவலின் படி, இந்த சம்பவத்தின் உண்மை நிலையை உறுதியாக அறியப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதனால், இந்த விவகாரத்தில் இருக்கும் மர்மம் அப்போது விலகும் என தெரிகிறது.