தமிழ்நாடு

“கருவறையில் பிறந்து கருப்பறையில் முடிந்தது என் வாழ்க்கை”- சுஜித் நினைவாக கல்வெட்டு..!

“கருவறையில் பிறந்து கருப்பறையில் முடிந்தது என் வாழ்க்கை”- சுஜித் நினைவாக கல்வெட்டு..!

webteam

திருவண்ணாமலையில் உள்ள அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியிலுள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.. அத்துடன் அங்கு சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு ஒரு நினைவு அஞ்சலியும் நடத்தப்பட்டது. அப்போது சுஜித் நினைவாக ஒரு கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார். 

இந்தக் கல்வெட்டில், “நான் சுஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. 


 
மேலும் சுஜித் உருவப்படத்திற்கு மாணவ மாணவிகளுடன் சேர்ந்து ஆட்சியர் கந்தசாமி மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.