தமிழ்நாடு

தமிழக அரசு அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன்

தமிழக அரசு அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன்

சங்கீதா

தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி, வேலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்பட கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.

அப்போது, “மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அதை கட்டக்கூடாது என தமிழக அரசும் உறுதியாக உள்ளது. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கீழ் மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது என தெரிவித்துள்ளது. எனவே, தமிழக அரசின் இசைவு இல்லாமல் தடுப்பணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. இந்த விஷயம் கர்நாடக அரசுக்கும் தெரியும்.

உச்சநீதிமன்றம் சொன்னாலும் நாங்கள் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொன்னால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது அதற்க்கு கீழ்படிவது தான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் பிறகு இந்தியாவில் எங்கே ஒருமைப்பாடு ஏற்படப்போகிறது. அப்போது மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு சாய்ந்து விடாது என கருதுகிறேன். கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பயப்பட வில்லை என்றால்,
மத்திய அரசும் அப்படி இருக்காது என நாங்கள் நம்புகிறோம். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு என்ன அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.