நாஞ்சில் நாட்டு மொழிநடையை, அதன் மணம் மாறாமல் வாசகர்களுக்கு விருந்தாக்கியவர் தோப்பில் முகமது மீரான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சாஹித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை 1.20 மணிக்கு நெல்லை பேட்டையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்த முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், சாய்வு நாற்காலி, கூனன் தோப்பு போன்ற நாவல்களையும், தங்கராசு, அன்புக்கு முதுமை இல்லை உள்ளிட்ட பல சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ஆம் ஆண்டு தோப்பில் முகமது மீரானுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவர் இன்று அதிகாலை காலமான நிலையில் அவரது உடல் நல்லடக்கம் பேட்டையில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பேட்டையிலுள்ள தோப்பில் முகமது மீரான் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார். மீரான் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வைகோ, தானும் தோப்பில் முகமது மீரானும் நல்ல நண்பர்கள் என்பதை நினைவுகூர்ந்தார். அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும், அவரது இலக்கியப் படைப்புகள் என்றும் உயிர்ப்போடு இருக்கும் என்றும் வைகோ நெகிழ்ந்தார்.