தமிழ்நாடு

மார்கழி உற்சவ விழா: அரங்கம் அதிர்ந்த பாடகர் சித் ஸ்ரீராமின் கர்நாடக இசை!

மார்கழி உற்சவ விழா: அரங்கம் அதிர்ந்த பாடகர் சித் ஸ்ரீராமின் கர்நாடக இசை!

webteam

மார்கழி உற்சவ விழாவில் அரங்கம் அதிர்ந்த பிரபல திரைப்பட பாடகர் சித் ஸ்ரீராமின் கர்நாடக இசைக் கச்சேரியை ரசிகர்கள் உணர்ச்சி பொங்க ரசித்து மகிழ்ந்தனர்.

மார்கழி உற்சவத்தையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள தமிழ் இசை சங்கத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இசை பிரபலங்களின் இசைக்கச்சேரி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

சினிமாவில் அசத்தி வரும் சித் ஸ்ரீராமின் இசையை கேட்க ராஜா அண்ணாமலை மன்ற அரங்கில் இசைப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. ஆரம்பத்தில் இருந்தே, சித் ஸ்ரீராமின் எனர்ஜி லெவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றதை நம்மால் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பாடலை பாடி முடிக்கும் போது ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்களின் கைத்தட்டல்கள் அரங்கை அதிர வைத்தது.

கச்சேரியை தொடர்ந்து பாடகர் சித் ஸ்ரீராம் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “இன்றைய இசை நிகழ்ச்சியை இத்தனை ரசிகர்கள் முன் நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர். மார்கழி மாதத்தை தவிர பிற மாதத்திலும் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு சபாக்களிலும் நடைபெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். திரைப்பட பாடல்கள் மற்றும் கர்நாடக பாட்டு ஆகிய இரண்டும் எனக்கு சிறப்பாக இருக்கிறது. வளர்ந்து வரும் இசைக் கலைஞர்கள் அதிகமாக பயிற்சி எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்