இருக்கும் இடத்தில் இருந்தே செல்போனில் ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்கும் வசதி இருத்தாலும், மைதானத்துக்கு செல்லும் ஆவல் ரசிகர்களுக்கு குறைந்தபாடு இல்லை. குறிப்பாக சென்னையில் போட்டியை காண ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருந்து டிக்கெட் வாங்கிச்செல்வதை காணமுடிகிறது. ஆனால் அப்படி டிக்கெட் வாங்க முடியாதவர்கள் கள்ளச்சந்தையில் இருமடங்கு பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் ஒரு மாய வலையில் சிக்கி பணத்தை இழந்தவர்தான் அருண்குமார். இவர், சென்னை ராயப்பேட்டையில் சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் ஐ.பி.எல். போட்டியை காண விரும்பியதால் கடந்த 6ஆம் தேதி சென்னை - மும்பை இடையே நடைபெற்ற போட்டிக்கு டிக்கெட் வாங்க அருண்குமார் முயற்சித்துள்ளார். ஆனால் இணையத்திலும் நேரிலும் அவரால் டிக்கெட் வாங்க முடியவில்லை. அப்போது தான் அவருக்கு இன்ஸ்டகிராமில் வினோத் யாதவ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் தன்னிடம் டிக்கெட் இருப்பதாகக்கூறி ஏற்கனவே விற்கப்பட்ட டிக்கெட்க்கான விவரங்களை அருண் குமாருக்கு பகிர்ந்துள்ளார். ஒரு டிக்கெட்டுக்கு 4,500 வினோத் விலை நிர்ணயிக்க அருணும் 20 டிக்கெட்டுக்கு 90 ஆயிரத்தை 4 தவணைகளாக அனுப்பியுள்ளார். அதன்பின்னர் டிக்கெட்டை கொடுக்காமல், பணத்தையும் திருப்பி வழங்காமல் ஏமாற்றியதாக வினோத் மீது கிரைம் குற்றப்பிரிவில் அருண்குமார் புகார் அளித்தார்.