கோவையில் ‘மக்களுடன் முதல்வர் திட்டத்தை’ இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து அவர் பேசுகையில், “மலைவளமும், தொழில்வளமும், கல்வி வளமும் பொருந்திய மாவட்டமான தென் இந்தியாவின் மான்சிஸ்டர் கோவை மாவட்டம். தமிழ் செம்மொழி மாநாட்டை கண்ட மாவட்டம் இது. இங்கே பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்த ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் மகத்தான திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலோடு கூடிய பெரும் மழையானது பெய்தது. 47 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழையானது பெய்தது. மேலும் முன்னெச்சரிக்கை மற்றும் போர்கால அடிப்படையில் அரசானது செயல்பட்டு இதனால் ஏற்பட்ட சேதங்களானது குறைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில், தற்போது தென்மாவட்டங்களில் கடுமையான மழையானது பெய்து வருகிறது. எனவே இதனை கையாள அரசு இயந்திரம் தென்மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டது போல தென் மாவட்டங்களிலும் நிச்சயம் அனைத்து நடவடிக்கையானது எடுக்கப்படும். திராவிட மாடல் அரசினுடைய முன்னோடி திட்டங்கள், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்,மகளிர் விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம். நான் முதல்வன், என்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, புதுமை பெண் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலமாக சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய விளிம்பு நிலையில் உள்ள மக்கள், மாற்று திறனாளிகள் நலிவுற்ற மக்களின் காவலனாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இச்சேவைகளை பெற அடித்தட்டு மக்கள் சிரமங்களை மேற்கொள்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை இத்திட்டத்தின் பயன்கள் எல்லாம் கடைகோடி மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்று கள ஆய்வு செய்ய முதலமைச்சர் திட்டமானது தொடங்கப்பட்டது. மண்டலவாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகளானது வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆய்வுகள் மூலமாக பொதுமக்கள் பயனடைவதை பார்க்க முடிந்தது.அரசு அலுவகங்களை போய்தான் உதவி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் பெரும்பாலான அடிப்படை சேவைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை,ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை,தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை, கூட்டுறவு துறை உட்பட 13 அரசு துறைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.
கையாளுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கப்பட்டது.எல்லா சேவைகளையும் மக்கள் எளிதாக பெறுவதற்காகவும் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் இத்திட்டம் தனிகவனம் செலுத்தும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் வெள்ளத்திற்கான நிவாரணதொகை வழங்குவது முடிந்ததும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களில் இருக்கும் ஊரக பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. முறையான கோரிகைகளாக இருந்தால் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.” என்று பேசினார்.
இந்நிலையில் நெல்லை, தென்காசி,கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் கோவையில் இருந்து காணொளியில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.