தமிழ்நாடு

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இருவர் திடீர் விலகல்

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இருவர் திடீர் விலகல்

webteam

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த குமரவேல் கட்சியிலிருந்து விலகிய நிலையில் மேலும் 2 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, பரப்புரை, விருப்ப மனுக்கள் பரிசீலனை எனத் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதற்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி வந்தது. வரும் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்த குமரவேலுக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமைக்கு குமரவேல் கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து இன்று குமரவேலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தச் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து குமரவேல் விலகிதைத் தொடர்ந்து, மேலும் 2 நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியுள்ளனர். அந்தக் கட்சியின் கடலூர் வடக்கு மண்டலப் பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் ஆகிய இருவரும் தாங்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.