தமிழ்நாடு

கட்டாத கழிப்பிடங்களுக்கு ரூ.4 கோடி? - ஆர்டிஐயில் வெளிவந்த உண்மை

கட்டாத கழிப்பிடங்களுக்கு ரூ.4 கோடி? - ஆர்டிஐயில் வெளிவந்த உண்மை

webteam

செய்யூர் ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் கட்டப்படாத நிலையில் கட்டியதாக சுமார் 4 கோடி  ரூபாய்க்கு மேல் கையாடல் செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் ஊராட்சியில் 3500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும், அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகளும் இதுவரை சரியாக வருவதில்லை என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தப் பகுதியில் அரசு சார்ந்த நலத்திட்டங்கள் என்னென்ன செய்யப்பட்டிருப்பதாக கேட்டறிந்தார். அதில், இந்தப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டதாகவும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தனிநபர் கழிப்பிடம் கட்டியதாக அரசு அதிகாரிகள் சுமார் 4 கோடி  ரூபாய்க்கு மேல் கையாடல் செய்து உள்ளதாகவும், தனிநபர் கழிப்பிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் நடைபெறவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த ஊராட்சியில் வடக்கு செய்யூர் பகுதியில் மட்டும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் ஊராட்சி முழுக்க எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.