பணம், நகையை தொலைத்தவர்கள் pt desk
தமிழ்நாடு

மதுரை: திருடுபோன நகைகளை சினிமா பாணியில் மீட்ட ஊர் பெரியவர்கள்

மதுரை அருகே திருடுப் போன நகைகள் மற்றும் பணத்தை ஊர் பெரியவர்கள் சினிமா பாணியில் மீட்டுக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

webteam

திருமங்கலம் அருகேயுள்ள பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி பாண்டியம்மாள் 100 நாள் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டியம்மாள் பணிமுடிந்து வீடு திரும்பிய போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 26 பவுன் நகைகள் மற்றும் 21,500 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ராகவன் - பாண்டியம்மாள் வீடு

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பகலில் திருட்டு நடந்திருப்பதால் வெளியூர் நபர்கள் இதனை செய்திருக்க வாய்ப்பில்லை என்பதை முடிவு செய்தனர். இது குறித்து ஊர் பெரியவர்களிடம் காவல்துறையினர் கலந்தாலோசித்த நிலையில், கிராமத்திற்கு களங்கம் ஏற்படாமல் இருக்க ஊர் பெரியவர்கள் நகையை மீட்க சினிமா பாணியில் ஒரு வழிமுறையை கையாண்டனர்.

அதன்படி அனைத்து வீடுகளிலும் பேப்பர் கவர் கொடுக்கப்பட்டது. இரவன்று ஊர்ப்பள்ளியில் பெரிய அண்டா வைக்கப்பட்டு திருடியவர்கள் பொருட்களை பேப்பர் கவரில் வைத்து அண்டாவில் போட அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள் தொடர்ந்த இந்த நடைமுறையில் முதல் நாளன்று 23 பவுன் நகைகளும் இரண்டாம் நாள் மீதமிருந்த மூன்று பவுன் நகை மற்றும் 20,000 பணம் மீட்கப்பட்டது.

Anda

திருடப்பட்ட நகைகளும் முக்கால்வாசி பணமும் மீட்கப்பட்டதையடுத்து, ஊர் பெரியவர்களின் இந்த சுவாரசியமான நடைமுறையை காவல்துறையினர் பாராட்டினர்