தமிழ்நாடு

மதுரை: யாகசாலையில் இருந்து சூடான காசை எடுத்துச் சென்ற ஊராட்சி துணைத் தலைவி உயிரிழப்பு

மதுரை: யாகசாலையில் இருந்து சூடான காசை எடுத்துச் சென்ற ஊராட்சி துணைத் தலைவி உயிரிழப்பு

kaleelrahman

மேலூர் அருகே கோவில் கும்பாபிஷேக யாகசாலையில் இருந்து எடுத்த காசு மூலம் ஏற்பட்ட தீயால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சாலைக்கிபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அந்த கும்பாபிஷேகத்திற்காக நடத்திய யாக சாலையில் இருந்த காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதற்காக யாகசாலையில் சூடாக இருந்த 11 காசுகளை எடுத்து தனது கைப்பையில் வைத்த மேலவளவு ஊராட்சி மன்ற துணைத் தலைவி சங்கீதா தனது இருசக்கர வாகனத்தில் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மேல் தீப்பற்றியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் அவர் தனியாக வந்ததால் தீயை அணைக்க முடியாமல் போராடியுள்ளார் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து 60 சதவீத தீக்காயங்களுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சங்கீதா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எரிந்து கொண்டிருந்த யாகசாலையில் இருந்து சூடான காசை எடுத்து கவனக்குறைவாக கைபையில் போட்டதே தீ விபத்திற்கு காரணம் என காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.