தமிழ்நாடு

மதுரை: ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - பொங்கல் பரிசுத் தொகுப்புகள் எரிந்து நாசம்

மதுரை: ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - பொங்கல் பரிசுத் தொகுப்புகள் எரிந்து நாசம்

webteam

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்களுக்கு வழங்க இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் எரிந்து நாசமானது.

மதுரை ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த இரவு நேர காவலர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து சுமார் 3மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள், ஆவணங்கள், மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்ப இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேட்டி - சேலை பண்டல்கள் பெரும்பாலும் எரிந்து சேதமடைந்துள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார், சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.