தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ‘உதயசூரியன் வடிவமா?’ - பாஜகவினர் எதிர்ப்பால் தோண்டப்பட்ட புதுச் சாலை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ‘உதயசூரியன் வடிவமா?’ - பாஜகவினர் எதிர்ப்பால் தோண்டப்பட்ட புதுச் சாலை

webteam

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை, உதயசூரியன் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்தச் சாலையை தோண்டிப் போட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெள்ளை மற்றும் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் மேலசித்திரை வீதி - வடக்கு சித்திரை வீதி சந்திப்பில் கடந்த 25 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து கற்களால் ஆன சாலைகளை அமைத்தனர்.

அந்தச் சாலை அமைத்த பணியாளர்கள் கருங்கற்கள் மற்றும் வெள்ளை கற்களை பயன்படுத்தி பூ போன்ற வட்ட வடிவில் சாலையில் டிசைன் செய்ததாக தெரிகிறது. அந்தச் சாலை வடிவமானது உதயசூரியன் போன்று காட்சி அளித்ததாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மதுரை மாநகர பாஜகவினர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உதயசூரியன் போன்று சாலை அமைத்துள்ளதாகவும், இதனை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் மாநகராட்சியிடம் வலியுறுத்தினர்.

இதனையடுத்து பதிக்கப்பட்ட கற்களை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தோண்டி எடுத்துள்ளனர். இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை முழுவதும் சேதமடைந்து மக்கள் நடந்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு திட்டங்களில் அரசியல் கட்சிகள் இது போன்ற தேவையற்ற காரணங்களை கூறி வருவதாகவும், இதற்காக சாலையை புதிதாக போட்ட மாநகராட்சி அதிகாரிகளே சாலையை இடித்தது, மக்களின் வரி பணத்தை வீணடித்த செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற திட்டங்களில் இனியாவது அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.