தமிழ்நாடு

"பொதுமுடக்கம் உள்ள மதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்" முதல்வர் அறிவிப்பு !

"பொதுமுடக்கம் உள்ள மதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்" முதல்வர் அறிவிப்பு !

jagadeesh

மதுரையில் பொதுமுடக்கப் பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பின்பு பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் "மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியதுபோல் இன்று அதிகாலை முதல் ஜூன் 30 ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் " இந்த ஊரடங்குசமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் ஜூன் 27 ஆம் தேதி முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இறுதியாக முதல்வர் தன்னுடைய உரையில் ""நாளை முதல் 30 ஆம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லையும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்நாட்களில் அனைத்தவிதமான போக்குவரத்தும் ரத்துச் செய்யப்படுகிறது. மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்" என தெரிவித்துள்ளார்.