மதுரையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உயிரிழப்புகள் காரணமாக, சடலங்களை எரியூட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் தொடர்ந்து காத்திருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 716 பேர். கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 741 பேர். தற்போது 5 ஆயிரத்து 248 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மதுரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 1051 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 794 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேபோல ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 574 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தத்தனேரி மின் மயாத்தில் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட உடல்களை எரியூட்டப்படுவதாகவும், உடல்களை எரியூட்ட தாமதம் ஏற்படுவதால் உறவினர்கள் விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அமரர் ஊர்திகளில் ஸ்டெச்சர் தட்டுப்பாடு உள்ளதால் மயானங்களில் உடல்களை அடுக்கி வைக்க முடியாதநிலை உள்ளதாகவும், இதனால் உடல்களை 24மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 13 அமரர் ஊர்தி வாகனங்களே உள்ள நிலையில் ஒரே வாகனத்தில் இரு உடல்களை எடுத்துவரும் அவலம் நிகழ்வதாகவும் தெரிகிறது.
நாளொன்றுக்கு உயிரிழப்புகள் 50-ஐ தாண்டி அதிகரித்து வரும் நிலையில், மதுரை தத்தனேரி மின் மயானைத்தில் உடல்களை எரியூட்ட முடியாத நிலையில் காத்திருக்க வைக்கும் அவலத்தோடு, உறவினர்களும் சோகத்தோடு காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.