திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’தாம் வசிக்கும் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் ராஜேந்திரா தியேட்டர் மற்றும் உமா சினிமா திரையரங்கம் உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடித்து வெளிவரும் ’லியோ’ திரைப்படத்திற்கு திரையரங்கம் முன்பு ரசிகர்களால் வைக்கப்படும் மிக உயரமான, நீளமான விளம்பர பதாகை, கட்அவுட் (பிளக்ஸ்) வாகனங்கள் நிறுத்துதல் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கப்படும் வெடிகள் ஆகியவற்றால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதன்காரணமாக உயிர்பலிகள் ஏற்பட வாய்ப்புள்ளதோடு மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் ஏற்படுகிறது.
இந்த பகுதியிலும், ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் தற்போது புதிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவதற்கு இன்னும் ஒருமாதம் ஆகும். இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அனைத்துத் தரப்பினரும் செல்வதால் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் ராட்சத பதாகைகள் மிகுந்த இடையூறாக உள்ளது. மேலும் ரசிகர்கள் கொண்டுவரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. தியேட்டரில் பார்க்கிங் வசதி இருந்தும் இதனை தியேட்டர் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.
கடந்தகாலங்களில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கட்சி சம்பந்தமாகவும், சினிமா ஆகியவற்றிற்காக வைத்த கட் அவுட், விளம்பர பதாகையினால் மரணங்கள் மற்றும் விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடித்து வெளிவரும் ’லியோ’ திரைப்படத்திற்கு ரசிகர்களால் வைக்கப்படும் ராட்சத விளம்பர பதாகை, கட் அவுட் (பிளக்ஸ்) வாகனங்கள் நிறுத்துதல் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கப்படும் வெடிகள் ஆகியவற்றிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’திரையரங்குகள் முன்பு பிளக்ஸ் பேனர் வைக்க எந்த அனுமதி கோரி விண்ணப்பம் வழங்கப்படவும் இல்லை. அனுமதிகொடுக்கப்படவும் இல்லை. மனுதாரர் தரப்பில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் ’லியோ’ பட பேனர், பிளக்ஸ்கள் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து, ’மாநகராட்சி பகுதிக்குள் ஏதேனும் ’லியோ’ திரைப்பட ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார். அப்போது அனுமதியின்றி சில இடங்களில் வைக்கப்பட்ட ’லியோ’ பட ப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், ’அனுமதியின்றி எந்த பேனர், ப்ளக்ஸ்களும் வைக்கக்கூடாது’ என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.