மதுரையில் கொரோனா அறிகுறிகளோடு சிகிச்சை பெற்ற தம்பதியிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் 8 லட்ச ரூபாய் முன்பணம் வசூலித்த வழக்கில் சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை ராஜாமில் பகுதியை சேர்ந்தவர் நேரு. இவர் அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
‘ஜூலை மாதம் மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள மருத்துவனமனையில் காய்ச்சல் மற்றும் தலைவலியினால் நானும் என் மனைவியும் சிகிச்சைக்கு சென்றோம்.
எங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சொல்லி 8 லட்ச ரூபாயை சிகிச்சைக்கான முன்பணமாக கேட்டார்கள். அதன்படி அந்த தொகையை செலுத்தினோம்.
எங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என தெரிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோம்.
65,840 ரூபாய் மட்டுமே எங்களது சிகிச்சைக்கான தொகையாக ரசீது எங்களிடம் கொடுக்கப்பட்டது. அதனால் அது போக நாங்கள் செலுத்தியதில் மீதமுள்ள தொகையை திருப்பி கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் ஒரு லட்ச ரூபாயை மட்டுமே கொடுத்தார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் பலனில்லை.
இதுபோன்ற சிலரது நடவடிக்கைகளால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே அந்த மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், நாங்கள் செலுத்திய தொகையை மீண்டும் ஒப்படைக்கவும் உத்தரவிடுக’ என அந்த மனுவில் அவர் தெரிவித்தருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.