தமிழ்நாடு

திருப்பதியில் லட்டு தயாரிக்க மதுரையிலிருந்து செல்லும் நெய்

திருப்பதியில் லட்டு தயாரிக்க மதுரையிலிருந்து செல்லும் நெய்

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் டெண்டர் முறையில் 175 டன் பசு நெய் வினியோகிக்கப்பட உள்ளது.

ஆந்திராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு பிறகு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு தயாரிப்பதற்காக, மதுரை ஆவின் நிறுவனம் நெய் வினியோகிக்க உள்ளது. இதுகுறித்து மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஒ.ராஜா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு‌ள்ளார். 

அதில், திருப்பதி தேவஸ்தான கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாதங்களுக்கு பசு நெய் வினியோகிக்கும் டெண்டர் மதுரை ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை 15 டன் வீதம் 6 மாதங்களுக்கு பசு நெய் அனுப்பி வைக்கப்பட ‌உ‌ள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் டெண்டர் கிடைத்திருப்பது மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கிடைத்த மைல் கல் என்றும் அதன் தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.