டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த 2017-ல் போராட்டம் நடத்திய 23 பேர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “மது விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், அந்த கொள்கை என்பது மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அந்த 23 பேர் மீதிருந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழசெவல்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்ட 23 பேர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘கீழச்செவல்பட்டி அம்மன் சன்னதி முதல் தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி கடந்த 2017ல் போராட்டம் நடந்தது. இது தொடர்பான புகாரின்பேரில், கீழசெவல்பட்டி போலீசார் என்மீதும் மற்றும் 22 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கையை திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், ‘‘டாஸ்மாக் ஊழியர்களையோ, வேறு யாரையுமோ தாக்கும் நோக்கில் எந்த குற்ற சம்பவமும் நடக்கவில்லை. மது விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், அந்த கொள்கை என்பது மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். 14 பெண்கள், 4 மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் இந்த வழக்கில் உள்ளனர். எனவே, திருப்பத்தூர் நீதிமன்றத்திலுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.